
A wedness day எனும் இந்திப்படம் ஒரு R.S.S காரனோட படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைத் தமிழில் கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார் என்றால் படம் எப்படி இருக்கும்? படம் பார்த்தவர்கள் என்ன சொல்லக்கூடும்?
அன்பே சிவம் கோஷ்டிகள் :-
மிகவும் முற்போக்கான படம் என்று சொல்லக்கூடும். (ஏன் ஒரு கம்யுனிஸ்டா இருக்கக்கூடாதுன்னு அறிவு ஜீவித்தனமாக கமல் சொல்லுறது நம்மளத்தான் தோழர்)
என்னயிருந்தாலும் நம்மவாள் கோஷ்டிகள்:-
தசாவதாரத்திற்குப் பிறகு இரசிகர்களாகி இருக்கும் இவர்கள் உள்ளுக்குள் பஜனைபாடலாம். (என்ன, நாசூக்கா அடிச்சிருக்கார். பாருங்கோ)
தொழில்நுட்ப இரசிகர்கள்:-
A wedness day யுடன் ஒப்பிட்டு F2வை நினைத்து ஸ்ருதிஹாசனையும் எதிர்பார்த்து ஒருவேளை உதட்டைப்பிதுக்கலாம். (wedness day டெம்போ இதுல இல்லையே).
அம்பேசிவம் ஆரியக்கோஷ்டிகள் :-
தமிழ்லயும் நமக்கு ஆள் இருப்பதற்காக உள்ளுக்குள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். (ராஜ்கமல் கம்பெனி சின்னமே தாமரைதான், புரிஞ்சுக்கிங்க)
விசிலடிக்கும் கோஷ்டிகள் :-
பார்த்தவரை, விளங்கியும், விளங்காமலும் இருக்க, விசிலடிக்க வேண்டிய இடத்தில் (தனக்கு ஓட்டு இல்லாமல் செய்துவிட்டதை கமல் சொல்லும் இடம்) விசிலடித்து விட்டு மட்டும் வர வேண்டியதை எண்ணி நொந்து கொள்ளக்கூடும். (அந்த சிகிரெட் பிடிக்கிற பொண்ணு, அதான் தமிழ் டி.வி ரிப்போர்ட்டர் நடேஷா கூட ஒரு டூயட் வச்சிருக்கலாம்).
என்னைப்போல் ஒருவனைப்பற்றி நாம் சொல்ல என்ன இருக்கிறது?
ஒரு போலீஸ்கமிஷனர். பெயர் மாறர்-மலையாளி- தான் ஒரு மனிதனைச் சந்தித்தாகவும், அவனது செயல்பாடுகள் தனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அதனால் வேலையை விட்டு விலகி விட்டதாகவும், கடற்கரையில் தனது நாயோடு நின்று கொண்டு தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். படம் தொடங்குகிறது. சிறையிலிருக்கிற இஸ்லாமிய பயங்கரவாதிகள் மூன்று பேரையும் ஆயுத வியாபாரியான ஒரு இந்துவையும் விடுவிக்கக் கோரி அவ்வாறு விடுவிக்காவிட்டால் சென்னையின் முக்கிய இடங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கும் என அரசை மிரட்டியதால் விடுவிக்கப்பட்ட கைதிகளைக் கொல்கிறார். அவர்களை விடுவிக்கச் சொன்ன கமல். கமல் எனக்குறிப்பிடக் காரணம் படத்தில் இவர் கதாபாத்திரத்திற்குப் பெயர் இல்லை.
ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறுகிற கதை இது. திரைக்கதை உத்தி, காட்சி அமைப்பு, வசனம், மாசாலாத்தனமில்லாதது, இவை அனைத்திற்கும் மேலாக படம் சொல்லும் கருத்து, இவைகளுக்காகத் தமிழ் பத்திரிக்கைகளால் உன்னைப் போல் ஒருவன் பாராட்டப்படலாம். கலைஞர் டிவியில் தொடர் விளம்பரங்களும், பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன.
மற்றவைகளை விட்டுவிடலாம். A Wednesday யையும் விட்டுவிடலாம். நாமே நேரடியாக உன்னைப் போல் ஒருவன் என்கிற இருவரையும் சந்திக்கலாம். ஆனால் இருவரும் ஒருவரே.
நீ யார்? உன் பெயர் என்ன? எனப் போலீஸ் கேட்கிறது. நான் ஒரு பொது மனிதன் comman man எனப் பதில் சொல்கிறார் கமல். இந்தியில், நான் யார் எனச் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அதற்கொரு சாயம் பூசிவிடுவீர்கள். அதனால் தவிர்க்கிறேன் என்பார் நஸ்ரூதீன்ஷா. ஷாவின் கூற்றில் தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து என்பதை மறைப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் கமல் சொல்லுகிற கூற்று, நீ இந்துவா, முஸ்லீமா சொல் எனக்கேட்கப்படும்போது நான் ஏன் பவுத்தனாக இருக்கக்கூடாதா?, கம்யுனிஸ்டாக இருக்கக்கூடாதா?, நாத்திகனாக இருக்கக்கூடாதா?, என எதிர்க்கேள்வி கேட்டு மடக்கிறார் கமல். (அட! யோக்கிய சிகாமணி! நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போ. ஆனால் அதை ஏன் சொல்லமாட்டேங்கிற). ஆனாலும் கூட தன்னை ஒரு இந்து என்றோ, முஸ்லிம் என்றோ அடையாளம் காணமுடியாதபடி மர்மமாக்கிக் கொள்கிறார் கமல்.
போனில் பேசும் மனைவி இன்ஷாஅல்லா என்கிறார். படத்தின் இடைவேளையில் முன்புறமாய் கைகளை கைகட்டிக் கொண்டு தலைகுனிந்து நிற்க பின்னனியில் அல்லா பாடல் ஒலிக்கிறது. அப்படியானால் கமல் முஸ்லீமா?
கமல் ஒரு முஸ்லீம் என்றால் இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளையும் பிரித்துக் காட்டிவிட்டதாக ஆகிவிடும். அந்தக் கதாபாத்திரத்தின் அளவிற்கு அது நியாயமானதாகக்கூட இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் படம் இஸ்லாமியர்களிடையே பெரும் வரவேற்பையும் பெறும். ரம்ஜானிற்கு முதல்நாள் வெளிவந்த படம் என்பதால் படத்தின் வசூலுக்கும் உத்திரவாதம் இருக்கும். இது கமல் என்கிற தயாரிப்பாளரின் கணக்காக இருக்கலாம். ஆனால் கமல் உண்மையில் இந்துதான். போனில் பேசும் மனைவி இன்ஷாஅல்லாவா என்கிறாள். இவர் ஆமாம் என்கிறார். இது இஸ்லாமியர்கள் பேசிக்கொள்ளும் முறையல்ல. ஆனாலும் கூட இப்படியொரு இஸ்லாமியச் சாயத்தைப் பட்டும்படாமலும்பூசி ஏமாற்றுகிறார்.
அடுத்து இவர் இதைச் செய்யத்துண்டிய காரணமான கதை, (அது சின்னக்கதைதான்) மகளா (தனது மகளா, பிறரது மகளா என்பது பார்வையாளர் இரைச்சலில் விளங்கவில்லை, கேட்டவர்கள் எல்லோரும் தெரியவில்லை என்றே சொன்னார்கள்). 40, 50 பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சூழ்ந்திருக்க, அவளது பிறப்புறுப்பில் கையை நுழைத்து அவள் சுமந்த கருவை வெளியில் எடுத்துப்போட்டனர் என்பதை கமல்பஞ்ச்சில் சொல்லுகிறார். அப்போது எந்த ராதாகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும், லால்கிருஷ்ணனும் வந்து காப்பாற்றவில்லை என்கிறார். இந்த வசனம் இந்து கடவுளை விமர்சனம் செய்வதால் இவர் முஸ்லீம் என்றுதான் தெரிகிறது எனச்சிலர் சொல்கிறார்கள். ஒருவன் வேதனைக்குள்ளாகி விழும்போது தனது கடவுளைத்தான் நொந்துகொள்வானே தவிர பிற மதக் கடவுளை அல்ல. இயேசு கிறிஸ்துகூட என்னை ஏன் கைவிட்டீர் ஆண்டவரே என்று தான் கேட்டார். காப்பாற்ற கிருஷ்ணன் வரவில்லையென்றால் என்ன அர்த்தம்? துன்பப்படுவது பாஞ்சாலி என்பதுதானே!.
கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்ததை நினைத்துக் கோபமும், வேதனையும் கொள்கிறார் கமல். வடமாநிலங்களில் மதக்கலவரம் பற்றி எரிந்தபோது அதைக்குறித்து தமிழர்கள் கவலைப்படவில்லை என்கிறார் கமல் சரிதான், பொதுப்புத்தி அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜராத்திலும், கோவையிலும், மும்பையிலும் ஒருசிலபேராவது தங்களால் முடிந்த அளவு தாக்குதலுக்குள்ளான குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆஸ்கார்நாயகன் (இல்லை, இல்லை இந்த பட்டம் இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் போய்விட்டது. உலகநாயகன்). குஜராத் படுகொலையின் போது என்ன படம் எடுத்து விட்டார்?. பஞ்சதந்திரமும், பம்மல்.கே.சம்பந்தமும்தானே? ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது 2001ல் புகழேந்தி காற்றுக்கென்னவேலி எடுத்தார். 2002ல் மணிரத்தினம் கூட கன்னத்தில் முத்தமிட்டால் எடுத்தார். ஆனால் கமல் என்ன செய்தார் தெரியுமா? இஞ்சாருக்கோ, இஞ்சாருக்கோ என தெனாலியில் ஜோதிகாவை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல ஈழத்தமிழனை ஒரு பயந்தாங்கொள்ளியாகவும, மனோ நோயாளியாகவும் சித்தரித்து இழிவுபடுத்தியிருந்தார்.
இவ்வளவு வேதனைப்படும் கமல், இதற்குப் பழிவாங்குவதற்காக அல்லாமல் பயங்கரவாதிகளைப் பயமுறுத்துவதற்காக இந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார். அதாவது தீவிரவாதிகளைக் கொல்லும் தீவிரவாதியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார் இது ஒரு சாமானிய, பொதுவான, சராசரி மனிதனின் கோபம் என்கிறார். ஆனால் இதற்கு அவர் பழிவாங்கத் தேர்ந்தெடுத்திருப்பது இஸ்லாமியர்களை. நமக்கு கேள்வியும் அங்கேதான் வருகிறது. ஆனாலும் ஒரு இந்துவை அதில் சேர்த்ததிற்கு காரணம் தான் இந்து என்பதை மறைத்துக் கொள்ளத்தான். அதைச் சொல்லியும் காண்பிக்கிறார் இருப்பினும் அவனை வெறும் ஆயுதவியாபாரியாக மட்டும் ஏன் காண்பிக்கிறார்? அதுவும் அவன் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விற்பவன் எப்படி? இந்துத்தீவிரவாதிகள் கிடைக்காததால்தானா அந்தச் சராசரிமனிதன் இப்படிச் செய்கிறான்? இல்லை இந்துக்களில் பயங்கரவாதிகள் இல்லை என்பதால் தான் இப்படிச் செய்கிறாரா? இந்துக்களில் ஏது பயங்கரவாதிகள்? பிற மதங்களில்தான் தீவிரவாதிங்களும், பயங்கரவாதிகளும் இருப்பார்கள். திணமனி தமிழ்நாட்டில் தமிழ்த்தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என எழுதியது. ஆனால் ஒருபோதும் இந்துத் தீவிரவாதிகள் இருப்பதாக எந்தபத்திரிக்கையும் எழுதியதுஇல்லை. ஆனால் கமலுக்கும் ஒரு இந்துத் தீவிரவாதிகூட தெரியவில்லையே ஏன்? கமல் பொதுவான சராசரி மனிதனாக இருந்திருந்தால் அவர் எந்த நால்வரைக் கொண்டுவந்திருக்க வேண்டும் தெரியுமா? 1. அத்வானி 2. பால்தாக்கரே 3. ராமகோபாலன் 4. நரேந்திரமோடி
சரி, கருவறுத்த கொலை உண்மையில் எங்கு நடந்தது? குஜராத்தில் நடந்தது. ஒரு இஸ்லாமியப் பெண்ணை நிறைமாத கர்ப்பிணி உயிரோடு இருக்கையிலே வயிற்றைக் கிழித்து திரிசூலத்தால் அந்தக் குழந்தையை குத்தி எடுத்து அவள் கண்முன்னால் நீட்டிக் காண்பித்து அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் வாட்டினார்கள் இதை நேராக கண்ட பெண்கள் தஞ்சையில் ம.க.இ.கவின் தமிழ் மக்கள் இசைவிழாவில் நேரடியாகச் சொன்னபோது ஏற்பட்ட துயரத்தை வார்த்தைகளால் உணர்த்தமுடியாது. அது ரத்தச்சாட்சியங்கள் என்று குறுந்தகடாகவும் கிடைக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய கொடூரத்தை இஸ்லாமியர்கள் செய்தார்கள் அதுவும் வடக்கே ஒரு ஊரில் என்று புளுகுகிறார் கமல். முதலமைச்சராக கருணாநிதியையே காட்டமுடிந்த, முதலமைச்சரின் வீடாக கோபாலபுரம்வீட்டையே காட்டமுடிந்த கமலால், இதை ஏன் தைரியமாகச் சொல்லமுடியவில்லை. இது பயமா? அல்லது ரத்தபாசமா?
பயங்காரவாதத்தைப் பேசும் ஒருவனால் அத்வானியையும், நரேந்திர மோடியையும் தவிர்த்து விட்டுப் பேச முடியுமா? அப்படி ஒருவன் பேசினால் அது உண்மையானதாக இருக்குமா?
பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் ஒரு சராசரிமனிதனின் கருத்து என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பயங்கரவாதம் ஏன் உருவெடுக்கிறது? அதை யார் உருவெடுக்க வைக்கிறார்கள் என்பதில் சராசரிமனிதனின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. மிகப் பெரும்பாலான நேரங்களில் இம்மாற்றுக்கருத்துக்களே உண்மையானதாக இருக்கிறது. பலர் கமலைப போல இருக்கலாம். அதனால் அதுவே உண்மையாகி விடாது. சர்வதேச அளவில் இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவெடுத்து ஊட்டம் பெற்று பரவுவதற்குக்காரணம் அமெரிக்காதான் (உதாரணம் பின்லேடன்).
இந்தியாவிலும்கூட இஸ்லாமிய பயங்கரவாத்தை வளர்க்கத்துடித்துக் கொண்டிருப்பது இந்துத்துவக் கும்பல்தான். தென்காசியிலும், வாரணாசியிலும், பிடிபட்டகதை உலகறிந்தது. கோவையில் குண்டுவைத்ததாக கைதுசெய்யப்பட்ட ஒரு இஸ்லாமியரும் கமல் பட்டியலிடும் டாப்மோஸ்ட் பயங்கரவாதிகளுள் அடக்கம். ஆனால் கோவை குண்டுவெடிப்பிற்கு முன் நடந்த கொடூரமான வன்முறை வெறியாட்டம் யாரால் நடத்தப்பட்டது? அதை நடத்திய கும்பலின் வணிக நோக்கம் என்ன? கைக்குழந்தைக்குத் தெரியும் இந்த உண்மைகள் கூட உலகநாயகனுக்குத் தெரியாமல் போய்விட்டதா! கமல்ஜி! இது என்ன உங்கள் சினிமாவா? அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் டாக்குமென்டரியா?
சராசரி மனிதன் தவறு செய்யக்கூடாதா? அப்படித்தான் கமலும் என யாரும் பொய் சொல்ல முடியாது. நாட்டில் நடைபெறும் பயங்கரவாதச் செயலைக்கண்டு கோபப்படும் ஒரு சராசரி மனிதன். இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, தினமணி, தினமலர் படிக்கும் சராசரி மனிதன் கமல் வேண்டுமானால் பயங்கரவாதத்தின் பின்னனி தெரியாமல் இருக்கலாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளரான உலகநாயகன் கமலுக்குத் தெரியாமல் இருக்குமா? தயாரிப்பாளர் கமல் சராசரி மனிதனாக தினமலர், தினத்தந்தி படிப்பவனை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஒரு கம்யுனிஸ்டைடோ, நாத்திகனையோ சராசரிமனிதனாகத் தேர்ந்தெடுத்திருக்கலாமே? அப்படித் தேர்ந்தெடுத்திருந்தால் தெரிந்திருக்கும் அவன் வைக்கும் முதல் குண்டு எந்த இடத்தில் இருக்கும் என்பது.
1984ல் இந்திராகாந்தி செத்த போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை யார் செய்தது? இந்து வெறியர்களா? காங்கிரசுக் குண்டர்களா? நானாவதி கமிஷன் சொன்னது என்ன? டர்பனும் தாடியும் வைத்திருந்தவரெல்லாம் தலைகள் துண்டாக்கப்பட்டு வீசப்பட்டனரே? அதே 1984ல் கமல் என்ன படம் நடித்தார் தெரியுமா? எனக்குள் ஒருவன். அப்போது என்னைப் போல் ஒருவன் எடுத்திருந்தால் கமல் யாருக்கு குண்டு வைப்பார், ஜகதீஸ் டைட்லருக்கா? ராஜீவ் காந்திக்கா?

பெரும்பாலான மக்கள் நலன் சாராத புதிய கல்விக் கொள்கை மூலம் கற்றலை, கற்பித்தலைக் கடைச்சரக்காக்கி அமோக விலைக்கு விற்பனை செய்து, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை தற்குறிகளாகவே இன்னும் நீட்டித்து வைத்திருக்கும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியாளர்கள் பயங்கரவாதிகளில்லையா?
உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டைக்காக கைத்தறியையும், விசைத்தறியையும் காவுகொடுத்து மானங்காக்க ஆடை வழங்கும் ஆயிரக்கணக்கான நெசவாளிகளின் தற்கொலைகளுக்கு காரணமான புதிய ஜவுளிக் கொள்கையைக் கொண்டுவந்தவர்கள் பயங்கரவாதிகளில்லையா?
பன்னாட்டு மருந்து தயாரிப்பு முதலாளிகளின் லாப வேட்டைக்காக, புதிதுபுதிதாக உற்பத்தி செய்யப்படும் நோய்க்கிருமிகளைப் பரிசோதனை செய்து பார்க்கும் எலிக்கூடமாக கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர்களைப் பயன்படுத்தும் கொடூரத்திற்கு காரணமான புதிய மருந்துக் கொள்கையை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகளில்லையா?
நிலத்தடி நீர்வளத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாரைவார்த்து விட்டு, குடிநீரைக் காசுகொடுத்து வாங்கும் அவலநிலைக்கு கோடிக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொண்டுவந்து நிறுத்தியவர்கள் பயங்கரவாதிகளில்லையா?
அவ்வளவு ஏன், மனிதச்சமூகம் உயிர்வாழ்வதற்கான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், கடந்த 10ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனரே! இவர்களுக்குக் குண்டு வைத்தது யார்? தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற சக்திவாய்ந்த நச்சுக் குண்டுகளை உழைக்கும் மக்களின் மீது வீசிய இந்திய ஆட்சியாளர்களெல்லாம் பயங்கரவாதிகளில்லையா?
இவ்வளவு அவலங்களும், துயரங்களுமுள்ள இந்த நாட்டில், இந்த அவலங்களுக்கும், துயரங்களுக்கும் காரணமாயிருக்கிற கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டி, அம்பலப்படுத்தி, அவர்களை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வை ஊட்டாமல், மேலும், மேலும் மக்களைச் சீரழித்து, நுகர்வுக்கலாச்சாரத்தில் சிக்கவைத்து அபலைகளாகவே ஆக்கிவைத்திருக்கும் ஊடகங்களின் முதலாளிகளும், அதன் எடுபிடிகளும் பயங்கரவாதிகளில்லையா? (தமிழ் சினிமாவையும் சேர்த்துதான் கமல்ஜி!)
குஜராத் கலவரத்தின்போது அரசும் இந்து வெறியர்களும் உன்னைப்போல் ஒருவனாக இணைந்து நின்றார்கள். ஆயுதம் நிரப்பப்பட்ட தார் ட்ரம்கள் வேனில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. போலீசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.காந்தியின் சபர்மதி ஆசிரமம் பூட்டிப் போட்டுவிட்டு ஓடிவிட்டது. “3 நாள் அவகாசம் தருகிறேன், அதற்குள் முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சட்டம் தன் கடமையைச் செய்யும்” என உத்திரவிட்டான் நரேந்திர மோடி. தெகல்கா.காம் பார்த்திருப்பீர்கள் அல்லவா? குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இனிமேலும் கைது செய்யப்படமாட்டார்கள். ஆனால் இந்த பொதுப்புத்தியில் சிலாகிக்கும் சக மனிதனிடம், பொலீசிடம், நீதிமன்றத்திடம், அரசிடம் நீதி கிடைப்பதணற்கான ஒரு நாதியும் இல்லாதபோது அவர்கள் என்னதான் செய்வார்கள்? இன்னும் சொல்லப்போனால் எல்லாவிதமான வழிகளையும் அடைத்துவிட்டு இசுலாமியர்களை பயங்கரவாத்திற்குள் தள்ளியதே இந்து பயங்கரவாதிகளும் அவர்களது அரசும்தான். சட்டக்கல்லூரி மாணவர்கள் திருப்பிப் போட்ட போட்டிற்கு மாணவர் அராஜகம், வன்முறை என்று முட்டாள்தனமாக புலம்பியதுபோல்தான் இசுலாமிய பயங்கரவாதமும் என்ற புலம்பலும்.
படத்தின் வடிவம் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. படத்தின் உள்ளடக்கத்தின்
மீது விமர்சனம் வைப்பவர்கூட வடிவத்தை சிலாகித்தே எழுதுகிறார்கள். இது ஆபத்தானது.
வெளிப்படையாகத் தன்னை அறிவித்துக் கொள்ளும் றா றநனேநளனயல -யைவிட
மறைத்துக் கொண்டு நடிக்கும் உன்னைப் போல் ஒருவன் ஆபத்தானது.
படம் எந்தக் கருத்தை பார்வையாளர்களிடம் பதியவைக்கிறது? “இசுலாமியர்கள் பயங்கரவாதிகள்”.
சிலாகிக்கப்படுகிற படத்தின் வடிவமானது இன்னும் இந்தக் கருத்தை ஆழமாக பதியவைக்கவே பயன்படுகிறது. அதாவது இசுலாமியர் எல்லோரும் பயங்கரவாதிகள் என்னும் கருத்தையே
ஆழமாக பதியவைக்கிறது. அப்படியானால் இந்த வடிவம் உள்ளடக்கத்தைவிட மிகவும் ஆபத்தானது.
உதாரமாக அவன் மிகச்சிறப்பாக, நேர்தியாக, அழகாக அந்த குழந்தையைக் கொலைசெய்தான் என்று
சிலாகிக்கமுடியுமா?
கமல் ஒரு பாசிஸ்ட் என குற்றம் சுமத்த முடியுமா? இல்லைதான். ஆனால் பாசிஸத்திற்கு
வக்காலத்து வாங்குகிற கேவலத்திற்கு அதைவிடவும் இழிவான பெயரைத்தான் சூட்டவேண்டும்.
பயங்கரவாதிகள் என்று நீங்கள் விளக்கம் கொடுப்பவர்களை விட இவர்கள் மிகக் கொடூரமான பயங்கரவாதிகளில்லையா?
இந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் பயங்கரவாதத்தை யார் கைக்கொள்ளுவது? நீங்கள் போவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் போலீஸ் கமிஷனர் உங்களை விட்டு விடலாம். பிறகு தனக்குள் உங்களையும் கண்டு கொண்டு மனசாட்சி உறுத்தி வேலையையும் விட்டுவிடலாம். ஆனால் இந்த கேடுகெட்ட பயங்கரவாதிகளை ஒழிக்கும் திருப்பணியில் இறங்குபவர்களை உங்கள் கமிஷனர் சும்மா விடமாட்டார்.
நீங்கள் போலீசைப் போல் ஒருவனாக இருக்கிறீர்கள்? ஆனால் மக்கள் அப்படி இருக்கமாட்டார்கள்! அவர்கள் உங்கள் இருவரையும் ஒன்றாகவைத்தே கேள்வி கேட்பார்கள். அதன்பிறகு உங்கள் இருவரையும் போல யாரும் இருக்க மாட்டார்கள். பொதுப்புத்தியை வருடிவிட்டு காசு பார்கும் ஒரு மோசடி வியாபாரிதான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதை இதைவிடவும் தெளிவாகக் கூறமுடியாது. இது மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டுமானால் விளங்காமல் போகலாம். காரணம் சரக்கு விற்பனைக் கொள்கை ஒன்றுதான். இவருக்கு பத்திரிக்கை, அவருக்கு சினிமா.
- குருசாமி மயில்வாகனன்
செப்டம்பர் 25, 2009